Monday, November 17, 2014

2015 உலக கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியினர்


fdg

rrf

Friday, October 18, 2013

இணையத்தமிழ் இதழ்களில் பெண்ணியம்


                  இணையத்தமிழ் இதழ்களில் பெண்ணியம்
                                     முனைவர். வே.மணிகண்டன்,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை & அறிவியல் கல்லூரி,
கீழம்பி, காஞ்சிபுரம்.

தமிழ் மொழியில் இலக்கியப் படைப்புகள் தொடக்கக் காலத்தில் ஓலைச்சுவடிகளில் தொடங்கி காலமாற்றத்திற்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ப படிப்படியாக மாற்றம் பெற்று புத்தகம், செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என் வெவ்வேறு தகவல்தொடர்பு ஊடகங்களில் தடம் பதித்தன. காலப்போக்கில் உலகின் முதல் பன்மொழி ஊடகமான இணையத்தில் தமிழ் இலக்கியப்படைப்புகள் இடம்பிடித்தன.
இணையத்தமிழ் இதழ்கள்
இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக அச்சுக்கலை மற்றும் இணையத்தில் அடியெடுத்து வைத்த முதல் மொழி தமிழ். புலம்பெயர்ந்த தமிழர்களின் முயற்சியினால் இணையத்தமிழ் இதழ்கள் தொடங்கப்பட்டன.  கட்டுரை, ஆய்வு, கவிதை, கதை, உரையாடல் போன்ற பல ஆக்கங்களுடன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இற்றிப்படுத்தப்பட்டு இணையத்தில் தமிழில் வெளிவரும் இதழ் இணையத்தமிழ் இதழ்1 எனக் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா சொற்பொருள் விளக்கம் தருகின்றது.
இணையத்தமிழ் இதழ்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் உணர்வுகளை நவீன இலக்கியப் படைப்புகளாக தரவேற்றம் செய்கின்றன. இணையத்தமிழ் இதழ்களில் திண்ணை, பதிவுகள், வார்ப்பு நிலாச்சாரல் ஆகிய இலக்கிய இதழ்களில்  வெளிவந்துள்ள கவிதை இலக்கியப் படைப்புகளை எடுத்துக்கொண்டு  இணையத்தமிழ் இதழ்களில் பெண்ணியம்எனும் ஆய்வுத் தலைப்பில் இக்கட்டுரை ஆராய்கிறது.

பெண்ணியம் சொற்பொருள் விளக்கம்
 பெமினிசம் என்ற ஆங்கிலச்சொல் பெண்கள் பற்றிய அறிவுத்துறை சார்ந்த ஒரு சமூக விஞ்ஞான சொல்லாகும். இச்சொல், தமிழில் பெண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது. பெமினிசம் என்ற சொல்லுக்கு பெண்ணிலைவாதம், பெண்நிலை ஏற்பு, மகளிரியம் என்று பல சொற்களும் வழங்கப்படுகின்றன. பெண்ணியத்தின் கருப்பொருட்களாக அனைத்து வகைப் பெண்களுக்கும் உரிமை வேண்டுவது, ஆண்பெண் சமத்துவ உரிமைகள், பெண்கள் தாம் மேற்கொள்ளும் அனைத்துவகை வாழ்க்கை முறைகள் மற்றும் பணிகள் அனைத்திற்கும் உரிமையுடையவர்கள் ஆகியவை ஆகும்.
பெண்ணிய கவிதைகள்
     பெண்கள் முன்னேற்றத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் நீக்குதல், பெண்களுக்கு விழிப்புணர்வு அளித்து அவர்களை ஒருங்கிணைத்து உரிமைக்கு போராடுதல், பெண்களுக்குப் பொருளாதாரச் சுகந்திரத்தை நிலைநாட்டுதல், ஆணாதிக்கத்தை அடையாளம் கண்டு எதிர்த்தல், பெண்களின் மீதான அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் ஆராய்ந்து அதனைப் போக்குவதற்கான தீர்வுகளை அறிதல், பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளை உணர்த்துதல் ஆகியவை பெண்ணிய கவிதைகளின் பாடு பொருள்களாகும்.
பெண்கள் ஒடுக்கப்படுவது  தொடர்பான பிரச்சனையானது சமூகத்தின் உற்பத்திமுறை மற்றும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்பு கொண்ட வரலாற்று ரீதியான ஒரு பிரச்சனையே2 என்பதை,
சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கு சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து
நாளை உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்துவர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து3
எந்த ஆணுக்கும் உள்ளது கருப்பை எனும் வெண்ணிலாவின் இக்கவிதையின் வாயிலாக அறிகிறோம். பெண்ணாகியவள் பத்துமாதம் கருச்சுமந்து வலிதாங்கி இரத்த வெள்ளத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆனால், இச்சமூகம் ஆணின் பெயரில்தான் அடையாளப் படுத்துகின்றது.
கேட்டால் கிடைக்குந்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா?
பாலூட்டுகிறோம்
கரு சுமந்து
குழந்தைத் தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை4
பல்வேறு சிரமங்களையும் வலியையும் தாங்கிப் பிள்ளையைப் பெற்றெடுக்கும் பெண்களை ஆண்கள் அன்புடன் அரவணைப்பதில்லை. மாறாக, அடைமைப்படுத்துகிறார்கள். பெண்னுக்குள்ள கருப்பையின் மகத்துவத்திற்கு நிகராக ஈடுசெய்யக் கூடிய எவ்விதத் திறனும் ஆணிடம் இல்லை என்பதை இக்கவிதை உணர்த்துகின்றது.
சுகிர்தராணியின் இரவுமிருகம் என்னும் கவிதையில்,
என் கண்களில் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
……………………………………………………………………………………………..
கூசும் வார்ததைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்தவேளை5
பெண்களின் உடல் ஆண்களின் நுகர்வுக்காக எனும் மரபை உடைத்தெறிந்து ஆணின் உடல் பெண்ணின் நுகர்வுக்காக எனும் புதுஅணுகுமுறையுடன் இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது. ஆணின் உடல் பெண்ணின் சுயப்புணர்ச்சி நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பெண்ணிற்கு இயற்கையாகத் தோன்றும் காம உணர்வுகளை இரவுமிருகமாக இக்கவிதை குறிப்பிடுகின்றது.
சல்மாவின் இரண்டாம் ஜாமத்துக் கதை எனும் கவிதை பெண்கள் தங்கள் உடலால் அடிமைப்பட்டிருக்கும் நிலை, காயம் பட்ட அனுபவங்கள் ஆகியவற்றை,
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக் கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன்குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்6
பெண் தாயானவுடன் அவள் உடல் பெருத்துப் போகின்றது. வயிற்றில் பிரசவக்கோடுகள் கடைசி வரை ஆறாதத் தழுப்புகளாக நிலைகொள்கின்றன. ஆனால், பல குழந்தைகளுக்கு ஆண் தந்தையானாலும் அவனது உடலில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுவதில்லை. பெண்ணின் உடலில் இயற்கை உண்டாக்கிய மாற்றங்களை இக்கவிதை பதிவுச்செய்கின்றது.
தஸ்லீமா நஸ்ரினின் பிறப்பு என்னும் கவிதையில்,
உலக ஜீவராசிகளில்
பெண்பால் பிறப்பு நலமான ஒன்று
ஆனால்
மனித இனத்தில் மற்றும் மாற்றம்7
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் பெண் இனம் உயர்ந்த ஒன்றாகத் திகழ்கின்றது. ஆனால், மானிடப் பிறவியில் மட்டும் ஆணைவிடப் பெண் பிறவியில் மிகத் தாழ்ந்தவளாக கருதப்படும் நிலையை ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கியுள்ள நிலையினை இக்கவிதை வெளிப்படுத்துகின்றது.
தஸ்லீமா நஸ்ரினின் பெண்கள் என்னும் கவிதையில்,
எல்லா வீடுகளிலும்
அவர்கள்
ஒரு பொருளை விற்கிறார்கள்
யார் அவர்கள்?
பெண்கள்
அவர்கள் எதை விற்கிறார்கள்?
சுதந்திரம்8
சமுதாய பண்பாட்டுக் கூறுகளான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மொழி, கலை, இலக்கியங்கள் போன்ற அனைத்தும் ஆண் தலைமையில் உருவாக்கப்பட்டவையே. பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் ஆண் உருவாக்கியதால் அவற்றைத் தனக்குச் சார்பாகவே ஆக்கிக் கொண்டான்.
ஆண் தலைமைச் சமூகம் பெண்களைச் சுதந்திரம் இன்றி அடிமைப்படுத்தும் சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. பெண்களுடைய உணர்வுகள் தனிமனித உரிமைகள் யாவும் ஆண்களினால் ஓடுக்கப்படுகின்றன. பெண்ணின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. பெண்கள் இச்சமூகத்தி்னால் தங்கள் தனித்துவம் இழந்தவர்களாக, யாரையும் சார்ந்திராமல் வாழ்வதற்கு இயலாதவர்களாக ஆண்களால் அடிமைப்படுத்தப் படுகின்றனர்.

இணையத்தமிழ் இதழ்களில் காதல், சமூகம், புலம்பெயர்வு ஆகிய கவிதை பொருண்மைகளுக்கு அடுத்து மிகுதியாக  படைக்கப்படும் கவிதைகள் பெண்ணிய கவிதைகளாகும். பெண்ணியம், பெண்ணிய கவிதைகள் குறித்த சிந்தனைகளை இணையத்தமிழ் இதழ்களில் ஊக்கப்படுத்த வேண்டும். ஏனேனில், பெரும்பாலும் தஸ்லீமா நஸ்ரின், சல்மா, மாலதி மைத்ரி, வெண்ணிலா, குட்டி ரேவதி, சுகிர்தராணி ஆகிய புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள் மட்டுமே இவ்விதழ்களில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இளந்தலைமுறையைச் சார்ந்த கவிஞர்களும் பெண்ணியக் கவிதைகளைப் பற்றிய சரியான புரிதல்களுடன் கவிதைகள் படைக்க முன்வர வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1.  www.vaarppu.com
2.  www.vaarppu.com
3.  www.vaarppu.com
4.  www.thinnai.com
5.  www.pathiyukal.com
6.  www.thinnai.com
7.  www.thinnai.com
8.  www.pathiyukal.com